இருபது கோடி ரூபாய் பட்ஜெட்டில், ஷங்கர் பட பிரம்மாண்ட செட்களை போல் அரங்குகள் அமைத்து ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே இன்று துவங்கியிருக்கிறது தி.மு.க.வின் இரண்டு நாட்கள் மண்டல மாநாடு.

தி.மு.க. துவக்கப்பட்ட பிறகு கருணாநிதி கலந்து கொள்ளாத முதல் மாநாடு இதுவாகத்தான் இருக்கும். முழுக்க முழுக்க ஸ்டாலினே பிரதானப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மாநாட்டின் ஹிட் ஹைலைட்ஸ் இதோ!

*    என்னதான் தி.மு.க.வின் கட்சி மாநாடாக இருந்தாலும் எதிர்கட்சி தலைவர் எனும் தோரணையில்தான் மாநாட்டில் வலம் வருகிறார் ஸ்டாலின்.

*    ரோஜா பூ இதழ்கள் விசிறியடிக்கப்பட, பில்ட் - அப்புக்கு நடுவில்தான் வந்திறங்கினார் ஸ்டாலின்.

*    2ஜி வழக்கில் வென்ற கெத்தில், ஆ.ராசா மிக நெருக்கமாகவே ஸ்டாலினுடன் வலம் வர, மேடையேறிய ஸ்டாலினுக்கு போலீஸ் இல்லாத குறையை விறைப்பான சல்யூட் அடித்து தீர்த்து வைத்தனர் கழக தொண்டரணியினர்.

*    மிகுந்த பொருட் செலவில் அமைக்கப்பட்டுள்ள மேடையிலேயே ஸ்டாலின், பேராசிரியர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள் தங்கிக் கொள்ள குளு குளு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அங்கு தங்கிதான் ஸ்நாக்ஸ், உணவு உண்டு, இளைப்பாறுகிறார்கள். இவர்களுக்கென மேடையில் உருவாக்கப்பட்டுள்ள அறைகளுக்கு குளிரூட்டுவதற்காக ஏகப்பட்ட ஏஸி மெஷின்கள் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன.

*    மாநாடு நடக்கும் ஈரோடு மாவட்டத்தில் வெயில் பொளந்து கட்டுகிறது. வசதி வாய்ப்புடைய நிர்வாகிகள் தங்கள் கார்களில் ஏஸியை போட்டுக் கொண்டு உள்ளே செட்டிலாகி ரெஸ்ட் எடுக்கிறார்கள்.

*    ஆனால் பல்லாயிரக்கணக்கான ஏழை தி.மு.க. தொண்டர்கள் வெயிலில் நொந்து கருகுகிறார்கள். மாநாடு பந்தலின் கூரை இரும்பு தகரத்தினால் ஆனதாக இருப்பதல் கொதிக்கிறதாம் பந்தல்.

*    மின்சார சிக்கனம் எனும் பெயரில் இருக்கின்ற மின் விசிறிகளையும் அடிக்கடி அணைத்து வைத்து தொண்டர்களை கொலையாய் கொல்கின்றனர்! என்று புலம்பல் வேறு

*    மாநாட்டின் முதல் நாளான, சனிக்கிழமையான இன்று எதிர்பார்த்த அளவிற்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் இல்லாத நிலையில் நாளை பெரும் கூட்டத்தை ஸ்டாலின் தரப்பு எதிர்பார்க்கிறதாம்.