இயக்குநர் சுந்தர்.சி பாஜக தமிழக தலைவர் எல்.முருகனை சந்தித்ததாக கிளம்பிய வதந்தி குறித்து நடிகையும், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளுமான குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். 

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் அவர்கள் நியமிக்கப்பட்டதில் இருந்தே திரையுலகைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். விஷால் உள்பட இன்னும் ஒரு சில நடிகர்களும் பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்பு திடீரென பாஜகவில் இணைய இருப்பதாக வதந்தி கிளம்பி வருகின்றன. பாஜக அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்த போதும் அந்த திட்டத்திற்கு குஷ்புவிடம் இருந்து ஆதரவுக்குரல் வந்ததே இந்த வதந்திக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்நிலையில் ’பாஜக தலைவர் எல் முருகனை சுந்தர் சி சந்தித்தது குறித்த விளக்கமளித்துள்ள அவர், ’’நான் பாஜகவில் இணைய இருப்பது குறித்த வதந்தி குறித்தும் பதில் அளிக்க விரும்பவில்லை. இதுபோன்ற வதந்திகளுக்கு நான் எந்த விளக்கமும் கொடுக்க தயாராக இல்லை. பாஜகவில் சேரப் போகிறேன் என்ற வதந்திக்கு விளக்கம் கொடுத்து எனது நேரத்தை நான் ஏன் வீணாக்க வேண்டும்?

பாஜக கொண்டு வந்த பல திட்டங்களை நான் கிழித்து தொங்க விட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் யாரும் என் மீது எந்த கேள்வியும் கேட்கவில்லை. ஆனால் ஒரே ஒரு சட்டத்திற்கு மட்டும் ஆதரவு கொடுத்ததற்கு ஏன் இவ்வளவு விமர்சனங்கள்? ஒவ்வொரு முறையும் இதுபோன்ற வதந்திகள் கிளம்பிக் கொண்டிருந்தால் அதற்கு நான் ஏன் விளக்கம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்? அது தேவையற்றது’ என அவர் தெரிவித்துள்ளார்.