முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் கூடுகிறது. இந்த கூட்டத்தின்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசே எடுக்க அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று கூட உள்ளது. அப்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களை விடுதலை செய்ய சட்டப்பிரிவு 161 பிரிவின்கீழ் தமிழக ஆளுநருக்க பரிந்துரை செய்ய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்பாரா? இல்லையா? என்பது பிறகுதான் தெரியவரும். 

 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, தன்னுடைய மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக்கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார்.