தமிழகத்தில் ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டது. அதேவேளையில் ஜூலை மாதத்தைப் போலவே அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி ஆகஸ்ட் மாதத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நள்ளிரவு 12 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு நள்ளிரவு 12 மணி முதல் அமலில் இருக்கும்.  அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள், மருத்துவமனைகள் மட்டுமே இன்று இயங்கும். இதர அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள், பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

 
ஆம்புலன்ஸ், மருத்துவ சேவைகளுக்காக மட்டும் சில இடங்களில் பெட்ரோல் பங்குகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று காவல் துறையும் சுகாதாரத்துறையும் அறிவுறுத்தியுள்ளன. மீறி இன்று நடமாடினால் காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக தமிழகமே வெறிச்சோடி காணப்படுகிறது.