சென்னை சேப்பாக்கத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து, நேற்றிரவு அங்கு விரைந்த வருமான வரித் துறை மற்றும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

விடுதியின் ‘சி’ பிளாக் 10ஆவது தளத்தில் எண் 10-Eல் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறையிலும் பறக்கும் படை அதிகாரி ஜேசுதாஸ் உடன் வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இரவு 10.30 முதல் 12.30 வரை நடைபெற்ற இச்சோதனையின்போது, அமைச்சரின் இரண்டு உதவியாளர்கள் மட்டுமே அறையில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் அறையில் சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித் துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. 
அறைகளில் கைப்பற்றப்பட்ட பைகளில் இருந்த துண்டுச் சீட்டு  தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவருக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. உதயகுமார் பிரச்சாரத்திற்காக தேனியில் இருந்துவரும் நிலையில், வருமான வரித் துறையின் விசாரணைக்கு ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


 
அதே நேரத்தில் அந்த துண்டுச் சீட்டில் விசாரணை நடத்தும் அளவுக்கு என்ன இருந்ததது ? என்று அதிமுக தொண்டர்கள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.