மண்டியா...கர்நாடகாவின் மிகச் செழிப்பான மாவட்டங்களில் ஒன்று. மைசூர் மாவட்டத்தில் இருந்தாலும் காவிரி நீரால் அதிகம் பயன்பெறுவதென்னவோ இந்த மண்டியா மாவட்டத்தினர்தான். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தென்னை, வாழை உற்பத்தி செய்யும் கேந்திரம் இது, இந்த செழிப்பான பகுதிக்கு யார் எம்பியாவது என்பது கர்நாடகா மாநிலத்தில் ஒரு பிரஷ்டீஜ் விசயமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில்தான் தற்போது விவிஐபிக்களின் குடும்பத்தினர் இங்கு களத்தில் இறக்கப்பட்டனர்.தேவகவுடாவின் இளைய பேரனும் குமாரசாமியின் முதல் மனைவியின் மூத்த மகனுமான கன்னட நடிகர் நிகில் குமாரசாமி களத்தில் இறக்கப்பட்டார். இதே நேரத்தில் குமாரசாமியின் அண்ணன் ரேவன்னாவின் மகன் ஆசன் தொகுதியில் களம் இறக்கப்பட்டார்.

மண்ணின் மைந்தன் என அப்பகுதியில் கொண்டாடப்படும் தேவகவுடா குடும்பத்திற்கு எதிராக சரியான வேட்பாளர் இறக்கப்படவேண்டும் என பா.ஜ.க திட்டமிட்டு செயல்பட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த பிரபல நடிகர் அம்பரீஷின்  மனைவியுமான சுமலதா களத்தில் இறக்கப்பட்டார்.

சுயேச்சையாகக் களத்தில் இறக்கப்பட்ட எடியூரப்பாவின் முழு ஆசியோடு பிஜேபியும் தனது கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் ஆதரவளித்தது.மண்டியா நகர்ப்பகுதி, சென்னப்பட்டினா, மத்தூர், உள்ளிட்ட தொகுதிகளின் அனைத்துப்பகுதியுமே கவுடாக்களின் கோட்டையாகும்.இந்தக் காரணத்தை முன்வைத்தே நிகிலைக் களத்தில் இறக்கினார் தேவகவுடா.

ஜாதி கவுடாக்களின் ஆதரவு, நிகிலின் சினிமா பிரபலம், வாரியிறைக்கப்பட்ட 120 கோடிகளுக்கும் மேலான பணம் அத்தனையையும் அடித்து நொறுக்கி துவம்சம் செய்துவிட்டார் சுமலதா. தற்போது அவர் மண்டியா தொகுதியில் வெற்றி முகத்தோடு உள்ளதே இதற்கு சாட்சி. இதே மண்டியா தொகுதியில்தான் மறைந்த அம்பரிஷ் தொடர்ந்து 2 முறை எம்பியாக இருந்தார்.தற்போது பிஜிபியிலிருக்கும் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் தூரத்து உறவினரான நடிகை குத்து ரம்யா என்னும் திவ்யா ஸ்பந்தனாவும் இங்கு எம்பியாக இருந்தார். 

தற்போது ராகுலுக்கு மிக நெருக்கமாக உள்ள திவ்யா ஸ்பந்தனா எவ்வளவோ போராடியும் கூட்டணிக் கட்சியான ஜேடிஎஸ்சின் நிகிலுக்கே மண்டியா ஒதுக்கப்பட்டது.இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளடி வேலையில் ஈடுபட்டதோடு, முன்பு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அம்பரிஷ் மனைவிக்கு விசுவாசமாக வேலை செய்தனர் .எது எப்படியோ குமாரசாமி குடும்பத்தினரின் செல்வாக்கை அம்பரீஷ் மீதிருந்த அனுதாப அலை அடித்து நொறுக்கியிருக்கிறது.