இறப்பில் கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேவலமாக அரசியல் செய்து வருகிறார் என பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக சாடியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சுஜித்தின் இறப்பு குறித்து அறிந்ததும் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு வந்தார்.  அங்கு சுஜித்தின் பெற்றோர் ஆரோக்கியராஜ்- கமலாமேரி மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின் மீட்பு பணியை பொறுத்தவரை, அரசு மெத்தனமாக செயல்பட்டு உள்ளது. பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்புப் பணியில் காட்டவில்லையோ என்ற ஆதங்கம் உள்ளது. மேலும், ஓடி விளையாட வேண்டிய சிறுவன் சுஜித்தை மயானத்திற்கு கொண்டு போய் விட்டது அதிமுக அரசு என விமர்சித்தார்.

இந்நிலையில், திருச்சி பாத்திமாபுதூரில் குழந்தை சுஜித்தின் கல்லறையில் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- எத்தனை கோடி நிதி கொடுத்தாலும் சுஜித்தின் மரணத்திற்கு ஈடாகாது. குறைசொல்வதை விட இதை பாடமாக எடுத்துக்கொண்டு இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

இறப்பில் கூட அரசியல் செய்வது திமுகவும், ஸ்டாலினும் மட்டுமே.  குழந்தையை மீட்கும் நேரத்தில் கடவுளை பற்றியும் மரணத்தை பற்றியும் குறை சொல்வது தவறான விஷயம். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசாங்கம், பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். இதனைத்தொடர்ந்து, சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய பிரேமலதா அவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவும் வழங்கினார்.