தமிழகத்தில் நீட் தேர்வு தற்கொலைகள் தொடர்வதை கவனத்தில் கொண்டு  தமிழக அரசு  நீட் தேர்வை அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- தமிழகத்தில் தற்கொலை மாணவர்களிடையே அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வருவதின் மூலம் தமிழகத்தில் ஏழை எளிய மக்கள்  மருத்துவர் ஆவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு விடும். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென பல்வேறு போராட்டங்கள்  தமிழக மக்களால் நடத்தப்பட்டது. மத்திய அரசு பிடிவாதமாக நீட் தேர்வை கொண்டு வந்தது மருத்துவ கனவோடு படிப்பைத் தொடர்ந்த மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வதில் உள்ள சிக்கல் காரணமாக  தற்கொலை முடிவை சமீபகாலமாக எடுத்து வருகின்றனர். 

அரியலூர்–அனிதா, கோவை-சுபஸ்ரீ, அரியலூர்-விக்னேஷ்,விழுப்புரம்–மோனிஷா,தஞ்சை பட்டுக்கோட்டை-வைஷி யா,தேனி-ரித்து ஸ்ரீ, புதுக்கோட்டை-ஹரிஷ்மா ,செஞ்சி–பிரதீபா,சேலம் எடப்பாடி அருகில்-பாரதி பிரியன்,கடலூர்–அருன்பிரசாத், ஆகியோர் நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்துள்ளனர்.தற்போது மதுரையைச் சேர்ந்த ஜோதி துர்கா என்ற மாணவி நீட் தேர்வுக்கு தயாரான நிலையில் தற்கொலை செய்து இருக்கிறார். தற்போது தர்மபுரி மாணவன் ஆதித்யா தற்கொலை செய்தி வந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு மாணவர்களின் உயிரை பறிக்கும் சட்டமாக மாறிவிட்டது. ஏழை எளிய கிராம புற மக்களின் மருத்துவ கனவை தகர்க்கும் நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். உடனடியாக தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து விதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். 

என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கோரிக்கை விடுக்கிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்திற்காக மாணவர்கள் இதுபோன்ற தற்கொலை முடிவுகளை எடுக்க கூடாது. தற்கொலை ஒருபோதும் சமூகத்திற்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தாது . பல்வேறு வழியில் சிறந்த  வாழ்வு நடத்த வழி உள்ள இவ்வுலகில் கோழைத்தமான முடிவாகவே பார்க்கப்படும் என்பதனையும் மாணவ சமுதாயம் உணரவும் வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.