பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். 

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே ஜெயலலிதா மரணத்தில் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டதால் எடப்பாடி தலைமையிலான அரசு விசாரணை கமிஷன் அமைத்தது. 

அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலையிலான விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. 

அந்தவகையில் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 

ஆனால் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு பங்கு இருப்பதாக புகார் கொடுத்தது யார் என்று கூறினால் மட்டுமே தன்னால் சம்மனுக்கு பதில் தர முடியும் என நீதிபதி ஆறுமுகசாமியிடம் சசிகலா தரப்பு தெரிவித்தது. 

இதையடுத்து அதற்கு விசாரணை ஆணைமும் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2,956 பக்க ஆவணங்களை சசிகலா தரப்பிடம் விசாரணை ஆணையம் சமர்ப்பித்துள்ளது. படித்துவிட்டு 15 நாட்களுக்குள் பிரமான பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு சசிகலாவுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. 

ஆனால் மீண்டும் கால அவகாசம் கேட்டு சசிகலா தரப்பு மனு அளிக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே சசிகலாவுக்கு 5 முறை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் முறையான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்றால் ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு எதிராக முடிவு எடுக்கப்படும் எனவும் கூறி விசாரணை ஆணையம் சசிகலா மனுவை தள்ளுபடி செய்துள்ளது

இந்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.