தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட 5 மாநிலங்களில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்காளத்தில் 1977-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 35 ஆண்டுகள் இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி ஆட்சியை வீழ்த்தி திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜியை எப்படியும் வீழ்த்தி பாஜக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக இடதுசாரிகளும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக பேச்சுகள் எழுந்துள்ளன.
2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸை எதிர்க்க காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் சில பகுதிகளில் கூட்டணி அமைத்தன. கேரளாவில் இரு கட்சிகளும் இரு துருவங்களாக உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் இக்கட்சிகள் கூட்டணி சேர்ந்தது கடும் விமர்சனத்துக்கு ஆளானது. கடந்த தேர்தலில் இடதுசாரிகள் 40 தொகுதிகளில் வென்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 46 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
 இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன. “மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்க உள்ள”காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவருமான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி அறிவித்துள்ளார். இதனால் மேற்குவங்க தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.