ராணிப்பேட்டை அருகே மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ராணிப்பேட்டை மாவட்டம்  காட்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளேரி, கொண்டக்குப்பம் மற்றும் மருதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மக்கள் கிராம கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று துரைமுருகன் பொதுமக்களிடம் அதிமுகவின் அவலங்களையும், ஊழல்களையும் எடுத்து கூறினார். 

இதனையடுத்து, கூட்டத்தை முடித்துக்கொண்டு சென்னைக்கு செல்லவிருந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர், மேல்விஷாரத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வருகிறார். தொடர்ந்து அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவலறிந்த திமுகவினர் மருத்துவமனை முன்பு திரண்டனர். கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து துரைமுருகனுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.