திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்தத் தொகுதிகளுக்கு சிவகங்கை நீங்கலாக 9 வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டது.

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்துக்கு சீட்டு வழங்க காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் எதிர்த்துவந்தார். சிவகங்கையை தனக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுவந்தார்.
மேலும் ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி என்ற கொள்கையை ராகுல் பின்பற்றுவதால், சிதம்பரம் குடும்பத்துக்கு சிவகங்கை கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வெளியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் சிவகங்கை தொகுதிக்கு கார்த்தி சிதம்பரம் பெயர் இடம் பெற்றிருந்தது.
இதனால், சுதர்சன நாச்சியப்பனுக்கு சீட்டு மறுக்கப்பட்டுவிட்டது. சிவகங்கையில் ப. சிதம்பரத்துக்கு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சுதர்சன நாச்சியப்பன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் ப.சிதம்பரத்தை கடுமையாகத் தாக்கி கருத்து தெரிவித்தார்.


“சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்துக்கு சீட்டு வழங்கியிருப்பது மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியது. சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரத்தை மக்கள் வெறுக்கிறார்கள். ஆனால், ப.சிதம்பரம் குடும்பத்துக்கு சீட்டு ஒதுக்கியிருப்பது சிவகங்கையில் காங்கிரஸ் கட்சிக்கு பலவீனம்தான். இது காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்துக்கும் நல்லது அல்ல. என்னுடைய அரசியல் முன்னேற்றத்தை தடுத்தவர் ப.சிதம்பரம். அவரை தோற்கடித்தேன் என்பதற்காக நான் மாநில தலைவராவதை ப.சிதம்பரம் தடுத்தார். மத்திய அமைச்சராக பல ஆண்டுகள் இடைஞ்சல் தந்தார். தற்போதும் சிவகங்கை தொகுதி கிடைக்காமல் பார்த்துகொண்டார்”என்று கடுமையாகத் தாக்கி பேசியிருக்கிறார்.
கடந்த 1999-ம் ஆண்டில் தமாகா சார்பில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் தேர்தலில் ப.சிதம்பரத்தை வீழ்த்தினார். அப்போது முதலே சிவகங்கையில் இருவரும் எதிர்துருவ அரசியலை நடத்திவருகிறார்கள்.