தமிழகத்தின் 46 வது புதிய தலைமைச் செயலாளராக நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் வேளாண் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். கடந்த 1985-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்றவர். 1985-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அரசு பணியில் சேர்ந்த சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலாளராகவும் பொறுப்பு வகித்த அனுபவம் பெற்றவர். சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆட்சி காலங்களில், கொண்டுவரப்பட்ட வண்ண தொலைக்காட்சி திட்டம், அம்மா உணவகம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, அரசின் நிதி நிலைமை திறம்பட கையாண்டது இவரின் தனிச்சிறப்பாக பேசப்படுகிறது. அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்த காலங்களில், தமது திறமையான செயல்பாடுகளால் நிதிச்சுமையை பெருமளவு குறைத்தவர்.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக தொடர்ந்து 9 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலங்களில் ஒரே துறையின் செயலாளராக தொடர்ந்து பொறுப்பு வகித்த ஒரே நபர் ஐஏஎஸ் அதிகாரி சண்முகம் மட்டுமே. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவரே... இருவருக்கும் இன்னொரு ஒற்றுமையும் இருக்கிறது. பழனிசாமி, சண்முகம் இரண்டு பெயர்களுமே முருகக் கடவுளின் பெயர்கள்.