சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட போது, தமிழகத்தில் பேருந்து, ரயில் சேவையும் முற்றிலுமாக  முடங்கியது. இந்நிலையில், மாநிலத்துக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் சிறப்பு விரைவு ரயில்களும், சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும் கடந்த மாதம் தொடங்கிய நிலையில், தற்போது புறநகர் ரயில் சேவையை தொடங்குமாறு வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரயில்வே துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்;- தமிழகத்தில், மாநிலத்திற்குள்ளேயும், மாநிலத்திற்கு வெளியேயும் ரயில் சேவையை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. அதேபோல், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக மெட்ரோ ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில் சேவையையும்தொடங்க தமிழக அரசும் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2ம் தேதி, சென்னை மற்றும் புறநகரில் இயங்கும் மின்சார ரயில் சேவையை  தொடங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.

மின்சார ரயில் சேவையை தொடங்கினால், பொது மக்களுக்கு பெரிதளவில் பயனுள்ளதாக இருப்பதுடன், பொருளாதாரம் விரைவில் மீள உதவும். இதனால், சென்னை மற்றும் புறநகரில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மின்சார ரயில் சேவையை தொடங்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.