மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 2 ரூபாய் 83 காசுகள் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அன்னிய செலாவணி விகிதம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மானியம் மற்றும் மானியமில்லாத  சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை மாதந்தோறும் 1–ந் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த மாதத்துக்கான, சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன.

அதன்படி  மானியத்துடன் கூடிய சிலிண்டர் ஒன்றுக்கு சென்னையில் ரூ.2.83 அதிகரித்து உள்ளது. இதன் மூலம், ரூ.481.84 ஆக இருந்த மானிய சிலிண்டர் விலை இனி ரூ.484.67 ஆக உயர்கிறது.

இதைப்போல மானியமில்லா சிலிண்டருக்கும் சென்னையில் ரூ.58.00 உயர்ந்துள்ளது. அதன்படி ரூ.712.50 ஆக இருந்த சிலிண்டர் விலை 770.50 ஆக உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.

உள்நாட்டு மானியமில்லா சிலிண்டர்களின் மாற்றியமைக்கப்பட்ட விலையில் ஜி.எஸ்.டி. அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் சர்வதேச சந்தையில் திடீர் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த விலை உயர்வு நடவடிக்கை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது. தற்போது சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.