தமிழகத்தின் முதல்வராக சசிகலா திங்கள்கிழமை பதவி ஏற்றால், பொறுக்கிகளை ஒடுக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதியஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக கடந்த மாதம் மெரீனாவில் கூடி இளைஞர்களும், மாணவர்களும் தன்எழுச்சியாக போராட்டம் நடத்தினர். அப்போது, இளைஞர்கள் மீது வெறுப்பு உமிழும் வார்த்தைகளில் ‘பொறுக்கிகள்’ என்று டுவிட்டரில் தொடர்ந்து சுப்பிரமணியசாமி கருத்து தெரிவித்து வந்தார்.

இதற்கு தமிழ் இளைஞர்களும் பதிலடி கொடுத்து வந்தனர். இதில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர் கமல் ஹாசனையும் வம்புக்கு இழுக்கும் வகையில் சுப்பிரமணிய சாமி கருத்துக்களை தெரிவித்தார். இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்தன.

சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, தமிழகம் தரப்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இடையே மறித்து சுப்பிரமணிய சாமி வாதிடும் போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்துள்ளது, போட்டியையும் நடத்தியுள்ளனர். இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று உசுப்பேற்றி உள்ளார்.

அதற்கு தமிழகம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், “ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாக போராட்டம் நடந்த போது, அந்த போரட்டத்தை வன்முறைக் களமாக மாற்ற, அவ்வப்போது டுவிட்டரில் தமிழர்கள் ‘பொறுக்கிகள்’ என்று கருத்துக்களை கூறி அமைதியற்ற சூழலை உண்டாக்க சுப்பிரமணிய சாமி முயற்சித்தார்.

ஒரு காலத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாக இதே நீதிமன்றத்தில் சுப்பிரமணிசாமி வாதாடி விட்டு, இப்போது எதிராகப் பேசுகிறார்'' என்று பதிலடி கொடுத்தவுடன் சாமி அமைதினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்ற.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு, போட்டிகளும் நடத்தப்பட்ட நிலையில், சிறிது நாட்கள் வாய் மூடி இருந்த சுப்பிரமணிய சாமி மீண்டும் வாய் திறந்து சர்ச்சை கருத்துக்களை தெறிக்க விட்டுள்ளார்.

டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில், “ அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா வரும் திங்கள்கிழமை தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு ஏற்றால், முதல் வேலையாக, தமிழகத்தில் உள்ள பொறுக்கிகளை ஒடுக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மீண்டும் பொறுக்கிகள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.