தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கு இந்திய கம்யுனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி கூறியிருப்பது கடும் கண்டறத்திற்குரியது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் வழக்கம்போல் தனது பணிகளைத் தொடர வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.

மாறாக, பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-யை பயன்படுத்தி தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்திட வேண்டும். சட்டப்பேரவையை முடக்கி வைக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது அவரின் சொந்த கருத்தா? அல்லது பாஜகவின் அகில இந்திய தலைமையின் கருத்தா? அல்லது நாட்டை ஆளும் பிரதமரின் கருத்தா? அல்லது தமிழ்நாடு பாஜகவின் கருத்தா? என்பதனை சம்பந்தப்பட்டவர்கள்தான் நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

சு.சாமியின் கருத்தை அலட்சியப்படுத்திட முடியாது. பாஜகவின் தூண்டுதலால் இக்கருத்தை வெளிப்படுத்துகின்றது. குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பாஜக முயல்கின்றது. முதல்வரின் உடல் நிலைமையைக் காரணம் காட்டி, ஜனநாயக விரோத செயலில் யார் ஈடுபட்டாலும், அதனை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.