தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு எதிராக, விமானத்தில் கோஷம் எழுப்பி, பிரபலமாகியிருப்பவர், தூத்துக்குடியை சேர்ந்த மாணவி லூயிஸ் சோபியா. இவர், கனடாவில் தங்கி, ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வருகிறார். தமிழிசையின் புகாரை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சோபியா, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில், சோபியா அனுமதிக்கப்பட்டார். அவர் தரப்பில் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், சோபியாவின் தந்தைக்கு சில அறிவுரைகளை வழங்கி, நீதிமன்றம் ஜாமின் அளித்தது. இதை தொடர்ந்து, இன்று மாலையில் சோபியா விடுதலையானார்.

இதற்கிடையே, சோபியாவின் பின்னணியில் வேறு யாரோ இருப்பதாக, தமிழிசை, இல.கணேசன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் சந்தேகத்தை கிளப்பினர். இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று, அவர்கள் வலியுறுத்தினர். தமிழிசைக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை, அதிமுக எடுத்தது.

இச்சூழலில், பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட சோபியா, விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினராக இருக்கக்கூடும் என்று, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி சந்தேகம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கனடாவில் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த பலர் உள்ளனர். இவரும் கனடாவில் இருந்து படிக்கிறார். எனவே, அந்த இயக்கத்தை சேர்ந்தவராக கூட இருக்கலாம். பொது இடத்தில், அவமதித்த சோபியாவை கைது செய்தது சரியான நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.