தமிழக சட்டசப் பேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் செய்த ரகளைகள் குறித்து கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா எம்.பி. சுப்பிரமணியசாமி, ‘ தி.மு.க. தேசவிரோத கட்சி. தி.மு.க.வைக் காட்டிலும் சசிகலாவே பரவாயில்லை' எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக நிலவிய அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார். அவரை 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில், இன்று சட்டப்பேரவை கூடியது.
பேரவையில், ரகசிய வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று தி.மு.க.வும், ஓ.பன்னீர் செல்வம் அணியும் கோரின. இதனால், ஏற்பட்ட களேபரத்தில் சபாநாயகர் இருக்கையையும், மைக், ஆகியவற்றையும் தி.மு.க.வினர் சேதப்படுத்தி, ரகளையில் ஈடுபட்டனர்.

இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுப்பிரமணிய சாமி டுவிட்டரில் வெளியிட்ட கருத்தில், “ தி.மு.க. வன்முறையில் ஈடுபடுகிறார்கள். தேசவிரோத கட்சி. தி.மு.க.வைக் காட்டிலும் சசிகலாவே பரவாயில்லை.
ஓ.பன்னீர் செல்வத்துடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டு நாடகம் நடத்துகிறார்கள். தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களில் தேசப்பற்று இல்லாத தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும்தான் அதிக இழப்பைச் சந்திக்கிறார்கள்.

தொலைக்காட்சி சேனல்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் குடியரசுத் தலைவர் ஆட்சி தமிழகத்தில் வந்துவிடும் என்று கூறுகிறார்கள். எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பு தடையாக இருக்கிறது. அனைத்து அதிகாரங்களும் சபாநாயகருக்கே இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.
