இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இருவருக்கும் பொருளாதாரம் குறித்து ஒன்றும் தெரியாது என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டின் காவலாளிகள் என பிரதமர் மோடி தெரிவித்தார். இதையடுத்து நானும் காவலாளி தான் என்ற ஒரு பிரசாரத்தை பா.ஜ.க.வினர் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் டுவிட்டரில் சவுக்கிதார் நரேந்திர மோடி என பெயரை மாற்றி உள்ளார். அமித்ஷா, அருண் ஜெட்லி, பியூஷ் கோயல், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் தங்களது பெயருக்கு முன்னால் சவுக்கிதார் என மாற்றி உள்ளனர்.

இந்த நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ‘’நான் ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னால் காவலாளி ஆக முடியாது. பிராமணர்கள் காவலாளிகளாக முடியாது. இதுதான் உண்மை. நான் சொல்லும் பணிகளை நிறைவேற்றுவதே காவலாளிகளின் பணியாகும். இதைதான் சவுக்கிதார்களிடம் எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். அதனால் நான் காவலாளியாக முடியாது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இருவருக்கும் பொருளாதாரம் குறித்து ஒன்றும் தெரியாது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 

எனினும், பிரதமர் மோடி தொடர்ந்து 6 வது இடத்தில் உள்ளோம் என்று கூறிவருகிறார். ஒரு நாட்டின் பொருளாதாரம் மக்களின் வாங்கும் சக்தியை பொருத்தத்து தான் கணக்கிட வேண்டும். அந்நிய செலாவணி வைத்துக் கணக்கிடக் கூடாது. அந்நிய செலாவணி இருப்பு நிலைத்தன்மையற்றது’’ என அவர் தெரிவித்தார்.