நடிகர் கமலஹாசன் ஒரு ஆடம்பர முட்டாள் என்றும், அவர் தற்போது முட்டாள்கள் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர உள்ளதாகவும் பாஜக எம்.பி. சுப்ரமணியன்சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களாக நடிகர் கமலஹாசன், அரசியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்து வருகின்றார். குறிப்பாக தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து தமிழக அமைச்சர்கள் கமலஹாசனை வரிந்துகட்டிக் கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பாஜகவின் தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோரும் கமலஹாசனை கடுமையாக விமர்சனர் செய்து வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் சென்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த கமல், அவரிடம் அரசியல் பாடம் கற்றுக் கொள்ள வந்ததாக தெரிவித்தார்.

இதனிடையே நடிகர் கமல் ஹாசனை, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி  தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக தனது  டிவிட்டரில் கமல் ஒரு ஆடம்பர முட்டாள் என்றும், அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் போய் சேரப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு டுவிட்டர் பதிவில் முதலில் அவர் ஒரு முட்டாள், தற்போது முட்டாள்களின் கட்சியில் போய் சேரப் போகிறார் என்றும் பதிவிட்டுள்ளார். இது கமல் ரசிகர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.