பா.ஜ.,வின் ஐ.டி., குழு தலைவர் அமித் மால்வியாவை நாளைக்குள் பதவியில் இருந்து நீக்காவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் கருத்து கேட்பேன் என அக்கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது பாஜகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுப்ரமணியன் சுவாமி, தன்னை கட்சியின் ஐ.டி., விங் தலைவர் தரக்குறைவாக விமர்சிப்பதாக குற்றம் சுமத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்.., "பா.ஜ.கவின் ஐ.டி., பிரிவு மோசமாக நடக்கிறது. அதில் சில உறுப்பினர்கள் போலி ஐடி.,யில் என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து டுவிட்டரில் பதிவிடுகின்றனர். எனது ஆதரவாளர்கள் கோபமடைந்து பதிலடி கொடுத்தால், நான் பொறுப்பேற்க மாட்டேன். ஆனால், கட்சியின் ஐடி பிரிவுக்கு பாஜக தான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை அமித் மால்வியா எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்தநிலையில், டுவிட்டரில் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பா.ஜ.,வின் ஐ.டி., விங் தலைவர் அமித் மால்வியாவை நாளைக்குள் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவரை நீக்காவிட்டால், பா.ஜக., என்னை பாதுகாக்கவில்லை என அர்த்தம். கட்சியில் எனக்கு இடமில்லாததால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்பேன். என்னை நானே பாதுகாத்து கொள்ள வேண்டியுள்ளது.