சசிகலா இனி பரோலில் மட்டுமே வந்து போகலாம்…. சொல்கிறார் சு.சாமி
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் நேற்று உறுதி செய்து உத்தரவிட்டது.
மேலும் சசிகலா உள்ளிட்ட மூவரையும் உடனடியாக பெங்களுரு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து கூவத்துரில் தங்கியிருந்த சசிகலா நேற்று 10 மணிக்கு அங்கிருந்து கிளம்பி போயஸ் தோட்டம் வந்து சேர்ந்தார். தொடர்ந்து இன்று அவர் பெங்களூரு புறப்பட்டுச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையுயில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, இந்த வழக்கில் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என கூறியிருந்தார்.
ஆனால் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாஜக எம்.பி சுப்ரமணியன்சுவாமி, சொத்துக்குவிப்பு வழக்கில் தற்போது சிறை செல்லவுள்ள சசிகலா உள்ளிட்ட மூவரும் இனிமேல், இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யமுடியாது என தெரிவித்துள்ளார்.
2 நபர்கள் கொண்ட நீதிபதிகளோ அல்லது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்மேல் மேல்முறையீடு செய்ய முடியாது என சு,சுவாமி தெரிவித்தார்.
வேண்டுமென்றால் சசிகலா இனிமேல் அவ்வப்போது பரோலில் மட்டுமே வெளியே வந்து போக முடியும் என்று தெரிவித்துள்ளார்.
