நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாவது உறுதியாகிவிட்ட நிலையில், தேர்தலில் திமுகவே அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சாமி அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

கடந்த மாதம்‘துக்ளக்’ விழாவில் பேசிய பாஜக ஆதரவாளரும் ஆடிட்டரும் பத்திரிகை ஆசிரியருமான எஸ். குருமூர்த்தி பேசும்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் குருமூர்த்தியின் கருத்தை பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் எதிரொலித்திருக்கிறார். இதுகுறித்து  டெல்லியில் பல்வேறு கருத்துகளை அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தெரிவித்த கருத்துகளின் சாரம்சம்:

“தமிழகத்தில் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் டி.டி.வி. தினகரன் அணியுடன் கூட்டணி வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தி.மு.க.தான் அதிக இடங்களை வெல்லும்.

தமிழகத்தில் பாஜக தனியாக நிற்க வேண்டும். பாஜகவுக்கென தனிப்பட்ட கொள்கை இருக்கிறது. அதை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். இருமுறை தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை. அப்படியே கூட்டணி வேண்டும் என்றால் சசிகலாவுடன்தான் செல்ல வேண்டும். ஆனால், அதற்கு சசிகலா  தயராக இல்லை” என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருக்கிறார்.

அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ஜ.க எத்தனை சீட்டுகள் வெல்லும் என்ற கேள்விக்கு, “அது எனக்குத் தெரியாது. அதை நான் கவனிக்கவே இல்லை" என்று சுவாமி தெரிவித்துள்ளார்.

தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு பற்றியும் சுவாமி கருத்து தெரிவித்திருக்கிறார். “பா.ஜ.க.வின்  ஓட்டு பிரிந்துபோனால் திமுக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் திமுக கூட்டணி பலமாக இருப்பதாக அர்த்தம் இல்லை. நம்முடைய முட்டாள்தனத்தால் ஓட்டைப் பிரித்துக்கொடுத்தால் அதுதானே நடக்கும். சசிகலா, தினகரன் பா.ஜ.க கூட்டணி தி.மு.க கூட்டணியை எதிர்த்து நின்றால் சசிகலா அணி வெல்லும். 30 இடங்களை வெல்ல வாய்ப்பு உண்டு.

அப்படி இல்லாமல் ஓட்டு மூன்றாக பிரிந்து பா.ஜ.க  ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணி தி.மு.க கூட்டணி, சசிகலா டீம் தனியாக நின்றால், அந்த வாக்குகள் பிரிவதில் தி.மு.கவுக்கு லாபம் கிடைக்கும். திமுகவுக்கு அதிக சீட்டுகள் கிடைக்கும்.  சசிகலாவுடன் கூட்டணி வைக்காவிட்டால் தி.மு.க அதிக இடங்களை வெல்லும். ஆனால், பா.ஜ.க தனியாக நின்றால் கொஞ்சம் வாக்குகள் கிடைக்கும். அடுத்தடுத்த தேர்தலில் வெல்லலாம்." என்று சுப்பிரமணியன் சுவாமி அதிரடியாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதிமுக பிளவுக்கு பிறகு தொடக்கம் முதலே சசிகலாவை தீவிரமாக ஆதரித்துவருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. தற்போது அவர் தெரிவித்துள்ள கருத்திலும் அதையே வெளிப்படுத்தியிருக்கிறார்.