subha vee and thamarai about parvathi ammal

ஈழத்தின் இறுதிப்போர் விவகாரம் தமிழகத்தில் இன்னும் எத்தனை அரசியல் முகமூடிகளை கழட்டப்போகிறதோ தெரியவில்லை. லேட்டஸ்டாக சுப.வீரபாண்டியனை சுற்றி ஒரு விமர்சன சர்ச்சை வட்டம் போட ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அதற்கு சூத்ரதாரியே சுப.வீ.தான் என்பதே இதில் உச்சம்!

கடந்த 2010_ம் ஆண்டு ஏப்ரல் 16_ம் தேதி நள்ளிரவில் மலேஷியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார் பிரபாகரனின் தாயான பார்வதியம்மாள். சென்னையில் சிகிச்சை பெற வேண்டி உரிய அனுமதியுடன் வந்திருந்தார். ஆனால் பல மணி நேரங்கள் அவரை விமானத்திலேயே காக்க வைத்துவிட்டு திருப்பியனுப்பிவிட்டது சென்ட்ரல் இமிக்ரேஷன் துறை. இது அவலம்!

இந்த சமயத்தில் தமிழகத்தை ஆண்டது கலைஞர் கருணாநிதி என்பது கோடிட்டுக் பார்க்க வேண்டிய தகவல். உயர் சிகிச்சைக்கு வழியின்றி இலங்கைக்கு திரும்பிய பார்வதியம்மாள் பின் சில மாதங்கள் தீராத உடல் வேதனையுடன் இறந்தார். 

பார்வதியம்மாளை சென்னையில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்காதது கருணாநிதி செய்த வரலாற்றுப் பிழை என்று 2011 பொது தேர்தலில் எதிர்கட்சிகள் பிரசார பொழுதுகளில் வறுத்தெடுத்தனர். இந்த விமர்சனம் கலைஞருக்கு பெரிய வலியை தர தவறவில்லை. 

இந்த சம்பவங்கள் நிகழ்ந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் கருணாநிதியின் நெஞ்சத்துக்கு நெருக்கமான மனிதர்களில் ஒருவரும், தி.மு.க.வை வெளியிலிருந்து தாங்கிப்பிடிக்கும் தூண்களில் முக்கியமானவருமான சுப.வீரபாண்டியன் இந்த விவகாரம் குறித்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை மேற்கொண்டுள்ளார். 

அதில் தோழர் தியாகு ஒரு நள்ளிரவில் தன்னை தொடர்பு கொண்டு பார்வதியம்மாள் இப்படி சிகிச்சை பெற சென்னை வந்திருப்பதாகவும், விசா இருந்தும் அனுமதி மறுக்கப்படுவதால் முதல்வரின் (கலைஞரின்) கவனத்துக்கு இதை கொண்டு செல்ல முடியுமா என கேட்டதாகவும், அதற்கு நிச்சயம் முடியும் ஆனால் நள்ளிரவில் எப்படி முதல்வரை தொடர்பு கொள்வது என்று யோசித்ததாகவும் அதற்குள் இரவிலேயே பார்வதியம்மாளை திருப்பி அனுப்பிவிட்டனர் என்றும் விவரித்திருக்கிறார்.

மேலும் எழுதியிருப்பவர்...மறுநாள் காலையில் கலைஞரிடம் இதை சொன்னபோது ‘ஏன் நேற்றே என்னிடம் கூறவில்லை?’ என்று கோபப்பட்டவர் ‘மறுமுறை வரச்சொல்லலாமா? என்று நாங்கள் கேட்டதும் தாராளமாக வரச்சொல்லுங்கள் என்று கூறிய கலைஞர் மத்திய அரசிடம் பேசி ஒப்புதலையும் பெற்றார்.

இந்த ஒப்புதல் தகவல் பார்வதியம்மாளுக்கு தெரிவிக்கப்பட, அதற்கு அவரும் அகமகிழ்ந்து நன்றிக்கடிதம் ஒன்றை எழுதினார் அதில் உங்களின் உடன்பிறப்புக்களில் ஒருவர் என்று சொல்லி கைரேகை இட்டு அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தை நாந்தான் கலைஞரிடம் கொண்டுபோய் கொடுத்தேன். ஆனாலும் அதன் பின் பார்வதியம்மாள் சென்னை வரவில்லை. ஏனென்றால், சென்னையில் பார்வதியம்மாள் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதித்த மத்திய அரசு, சிகிச்சை நாட்களில் அவரை அரசியல் தலைவர்கள் யாரும் பார்க்கக்கூடாது என்று சொல்லியிருந்தது.

இந்த கட்டுப்பாடை இங்கிருக்கும் தலைவர்கள் சிலர் விரும்பவில்லை. அம்மாவுக்கு உடல்நலன் குணமாகாவிட்டாலும் கூட பரவாயில்லை ஆனால் அவரை குணப்படுத்திய பெயர் கலைஞருக்கு போய்விடக்கூடாது என்றே எண்ணினர். ஆக அம்மாவின் மரணத்துக்கு யார் காரணம் என்பதை இனி காலமே முடிவு செய்யட்டும்.” என்று கூர்மையான பதிவை மேற்கொண்டிருந்தார். இது ஈழ நேயர்கள், விடுதலைப்புலிகளின் செயல்பாட்டை கவனித்த விமர்சகர்கள், அரசியல்வாதிகள், தமிழ் உணர்வாளர்கள் என எல்லா மட்டங்களிலும் பரபரப்பை கிளப்பியது. 

அதன் இறுதி வரிகளில் ‘மரணத்துக்கு யார் காரணம்?” என்பவற்றின் மூலம் வைகோ மற்றும் நெடுமாறன் இருவரையும் மறைமுகமாக விரல் நீட்டியிருக்கிறார் சுப.வீ. என்று தெளிவுரை கொடுத்து தீயை பற்றவைத்தனர் சிலர். காரணம், பார்வதியம்மாள் விமானத்திலிருந்து இறக்கப்படாமல் மீண்டும் திருப்பியனுப்ப்பட்டபோது விமான நிலையத்தில் அவரைக் காண நின்றவர்கள் வைகோவும், நெடுமாறனும்தான். 

சுப.வீ.யின் இந்த சுரீர் பதிவுகளும், சாடல்களும் ம.தி.மு.க.வை ரொம்பவே உரசிவிட்டது. இதற்கு பதிலடியாக ம.தி.மு.க.வை சேர்ந்த செந்திலதிபன் ஒரு ஆய்வு பதிவை மேற்கொண்டார். அதில் ‘’பார்வதியம்மாள் வந்த செய்தியை தமிழக அரசுக்கு மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் முறைப்படி தெரியப்படுத்தினர்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை தமிழகத்தின் ஆட்சியாளர் (கலைஞர்) தொடர்பு கொண்டு சில விஷயங்களை கூறினார். முள்ளிவாய்க்காலுக்கு பிறகு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் மீது தமிழக மக்கள் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் பிரபாகரனின் தாயார் இங்கு வந்து தங்கினால் நிலைமை கட்டுமீறி போகும்.” என்று பதிவிட்டவர், சுப.வீரபாண்டியனை நோக்கி சில கேள்விகளையும் தொடுத்திருந்தார். இது பார்வதியம்மாளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிட கலைஞர் முயன்றார் என்று வீரபாண்டியன் சொல்வதை தகர்க்கும் வகையில் அமைந்திருந்தன. 

செந்திலதிபனின் பதிவு ம.தி.மு.க.வின் முக்கியஸ்தர்களால் பகிரப்பட்டது. அப்படி பகிர்ந்த ஒருவரின் முகநூல் பக்கத்தில் அதற்கு பின்னூட்டம் எழுதியிருக்கிறார் தோழர் தியாகுவின் மனைவியும், பாடலாசிரியருமான தாமரை. 

அதில் தியாகுவிடம் இரவில் தான் பேசியதாக சுப.வீரபாண்டியன் விளக்கியிருக்கும் சமயத்தில் நான் தியாகுவின் அருகில்தான் இருந்தேன். இருவரின் உரையாடலுக்குமான சாட்சி நானேதான். பார்வதியம்மாள் பற்றி விஷயத்தை சுப.வீ.யிடம் சொல்லி ‘ஏதேனும் செய்ய முடியுமா?’ என்று தியாகு கேட்டபோது ’இந்த இரவில் என்ன செய்வது? நாளை பகலிதான் முடியும்” என்று சொன்னது வரை உண்மை. இதை சொல்லியபோது சுப.வீ.யின் குரலில் பதற்றமோ, வருத்தமோ இல்லை. 

தி.மு.க.வுக்கு சாதகமான சூழலில் தான் நிற்பதால் படும் அவமானங்களையும், அவலங்களயும் எப்போதுமே தியாகுவிடம் சொல்லி புலம்பும் சுப.வீ. அந்த உரையாடல் நிகழ்ந்த அன்றும் அப்படி பேசினார். கூடவே தமிழர்களுக்கு கலைஞர் செய்த துரோகமாக ஒரு பட்டியலையும் அர்ச்சனை செய்தார். இவ்வளவையும் பேசிவிட்டு இறுதியில் ‘என்ன செய்யுறது தியாகு? நம்ம பிழைப்பு அப்படி.’ என்று சொன்னார். இதற்கு பதில் சொல்லாமல் தொலைபேசியை வைத்துவிட்ட தியாகு ‘இதெல்லாம் ஒரு பிழைப்பு.’ என்று சொல்லி கேவலமாக சிரித்தார்....

என்றெல்லாம் பதிவிட்டிருக்கும் தாமரை, தனது பின்னூட்ட நீட்சியில் சுப.வீ.யின் பொய் முகங்களை பாரீர் என்று பல வகையில் விமர்சித்து தள்ளியிருக்கிறார். பின்னாட்களில் சுப.வீ.யும், தியாகுவும் சேர்ந்து தீட்டிய சதி திட்டங்கள், ஏமாற்று வேலைகளுக்கு தானே வாழும் சாட்சி என்று குறிப்பிட்டிருப்பவர் ‘காலம் வரும்போது மிச்சத்தையும் எடுத்துரைப்பேன்.’ என்று....பார்ட் 2 வுக்கான அஸ்திவாரத்தையும் போட்டிருக்கிறார். 

இவையெல்லாமே ஈழ நேயர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. சுப.வீ.யும், தியாகுவும் இந்த பின்னூட்டத்தால் அதிர்ந்து போயிருக்கிறார்களாம். 

இந்நிலையில், தாமரையின் தடதடப்புகளுக்கெல்லாம் கவலைப்படாமல் தி.மு.க. நிர்வாகிகள் பலர் சுப.வீரபாண்டியனுகு போன் செய்தும், முக நூல் வழியாகவும் ‘அண்ணே! தலைவரோட வைரவிழா மேடையில இந்த விஷயத்தை விளக்கமா நீங்க பேசணும், தலைவர் மேலே இருக்கிற அவதூறு கறை துடைக்கப்படணும். நீங்க உங்களோட அழகான தமிழில் அதை நேர்த்தியா விளக்குறதை நாங்க நேரலையா கவனிக்கணும்.’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பதுதான் ஹைலைட்.

பார்வதியம்மாள் விவகாரம் குறித்து ஆளாளுக்கு ஒரு கோணத்தை விளக்குகிறார்கள். உண்மையில் நடந்தது என்ன என்பது பார்வதியம்மாளின் ஆன்மாவுக்குதான் தெரியுமோ?!