சென்னை பள்ளிக்கணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ வாகனத்தின் மீது விழுந்தது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இந்த விபத்தில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். ஆனால், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. இப்போது, ஜெயகோபால் விரைவில் கைது செய்யப்படுவார் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு காவல்துறை சார்பில், கடந்த 20-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தேன்கனிக்கோட்டையில் பதுங்கியிருந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.