10 மற்றும் 12-ம் வகுப்புக்கான துணைத் தேர்வு தொடங்கியது. 10, மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வு மாநிலம் முழுவதும் இன்று தொடங்கியது.

மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 35,000-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு துணைத் தேர்வை எழுதி வருகின்றனர். 12-ம் வகுப்புக்கான தேர்வு வரும் 28-ம் தேதி வரையும், 10-ம் வகுப்புக்கான தேர்வு வரும் 26 வரையிலும் நடைபெற உள்ளது.

  

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான தேர்வும் இன்று தொடங்கியது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக, ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டுள்ளனர். உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்த பின்னரே, தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். முகக் கவசம், தனி மனித இடைவெளியை இறுதி வரை கடைபிடிக்க தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, தேர்வு எழுதவிருந்த மாற்றுத் திறனாளி தேர்வர்கள் அனைவருக்கும் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ப்பட்டது. மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு அவர்களின் இருப்பிடத்துக்கு அருகிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.11-ம் வகுப்புக்கான துணைத் தேர்வு வரும் செப். 29 முதல் அக். 7 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.