நான் இங்கு தொண்டர்களைப் பார்க்கவில்லை என்றும் இங்கு இருப்பவர்கள் அனைவருமே தலைவர்கள் என்று தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் பேசினார். சென்னை பாலவாக்கம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,

பள்ளி தாண்டாத என்னை கலை தான் காப்பாற்றியது. என் பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமையை தந்த பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கலை என்ற பாதையைக் கொண்டு முன்னேறியவன் நான். உங்கள் வாழ்வை மாற்றி அமைக்கும் சக்தியாக அரசியல் உள்ளது என்றார்.

மாணவர்கள் அரசியலைக் கண்காணிக்க வேண்டும். மறந்ததால்தான் இந்த நிலை உள்ளது. மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே அரசியல் பயணம் செய்து வருகிறேன் என்று கூறினார். நான் இங்கு, தொண்டர்களைப் பார்க்கவில்லை. இங்கு இருப்பவர்கள் அனைவருமே தலைவர்கள். மக்கள் நீதி மய்யம், உங்களைப் போன்றவர்களையே அழைக்கிறது. என்னை ஆதரித்தோ எதிர்த்தோ நீங்கள் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது உங்கள் உரிமை. உங்கள் பொறுப்பு. 

நான், உங்களுள் ஒருவனாக இருக்கவே விரும்புகிறேன். மக்கள் ஆட்சி மலர வேண்டும் என்றால், அதை மக்கள்தான் மலரச்செய்ய வேண்டும். மய்யம் என்றால், நடுவில் இருந்துகொண்டு இரண்டு பக்கமும் பார்த்து உங்கள் அறிவிற்கு நியாயமான, மனதிற்கு நேர்மையான முடிவை எடுத்தல். மய்யத்தில் இருப்பதை அனைவரும் கிண்டல் செய்கிறார்கள்.

ஆனால், அப்படி வாழ்வது மிகவும் கடினமான காரியம். அதை நான் செய்ய முயற்சிக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட, நம் நாடு ஒரு சிறந்த மய்யமாக வளரும் என்று கமல் பேசினார்.