தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை அக்டோபர்-30 வரை நீட்டிக்கவும் , நீக்கப்பட்ட 40 % பாடங்கள் எவையென்று வெளியிடவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-  

எதிர்வரும் 30 -9-2020 அன்று மாணவர் சேர்க்கை முடிகிறது. இதுவரை அரசு பள்ளிகளில் 13 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது. இது அரசுபள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 உள் ஒதுக்கீடு முக்கியக்காரணமாகும். மேலும் மாணவர் சேர்க்கைக்கு தனியார் பள்ளியிலிருந்து வரும் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் இல்லையென்றாலும் பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம் என்ற அரசின் அறிவிப்பும் காரணமாகும். தனியார் பள்ளிகளில் கட்டணம்  கட்டினால் மட்டுமே  மாற்றுச்சான்றிதழ் தரப்படும் என்றதினால் பெரும்பாலான பெற்றோர்கள் மன உளைச்சலில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் தமிழகத்திலுள்ள பல்வேறு வகை பள்ளிகளில் டெர்மினல் கிளாஸ் என்று சொல்லக்கூடிய பள்ளி இறுதி வகுப்பு மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்காமல் சிலரும் மாற்றுச் சான்றிதழ் வாங்கி பள்ளிகளில் சேராமல் சிலரும் இருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.

பொதுமக்கள் இந்த மாத இறுதியில் கருத்தில்கொண்டு தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து விலையில்லா பொருள்களை பெற்று கல்வி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். சில பள்ளிகளில் இன்று கூட மாணவர்கள் வந்து சேர்ந்துள்ளனர்.  மாணவர் சேர்க்கை இன்று வரை தொடர்கிறது, பொதுமக்கள் சிலர் பள்ளி திறந்ததும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம் என்ற மனநிலையில் பலர் உள்ளனர். இது ஏற்புடையதல்ல உடனடியாக மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்து பயன்பெற வேண்டும். கல்வித்துறை அலுவலர்களும் உரிய ஆய்வு செய்து டெர்மினல் வகுப்பு மாணவர்கள் யாரேனும் மாற்றுச் சான்றிதழ் பெறாமல் இருக்கிறார்களா? சான்றிதழ்களைப் பெற்று பள்ளிகளில் சேராமல் இருக்கிறார்களா என்பதை உரிய ஆய்வில் கண்டறிய வேண்டும். பள்ளி ஆசிரியர் பள்ளி தலைமையாசிரியர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கவும் தயாராக உள்ளனர். அரசுப் பள்ளிகள் மீது பொதுமக்கள் நாட்டம் கொண்டிருக்கும் இந்த சூழலில் பள்ளியில் சில மாணவர்கள் சேராமல் இருப்பது தெரியவருகிறது. 

இன்னும் பள்ளிகளில் சேராமல் இருக்கும் மாணவர்கள் உடனடியாக பள்ளிகளில் சேர்ந்து பயன்பெறவும், கொரோனா பெருந்தொற்றையும் கருத்தில்கொண்டு மாணவர் சேர்க்கை அக்டோபர் 30 வரை நீட்டிக்க வேண்டுகின்றோம்.மேலும், கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடபட்டுள்ளதால் தொலைக்காட்சி வாயிலாகவும் யூடியூப் வழியாகவும் தற்போது பயின்றுவருகிறார்கள். மாதங்கள் கடந்துவிட்டதைத் தொடர்ந்து 40 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் படிக்கும் வகையில் நீக்கப்பட்டப் பாடங்கள் 40 சதவீதம் எவை எவையென்று உடனடியாக அறிவிக்க மாண்புமிகு. முதல்வர் அவர்கள் ஆவனசெய்யவேண்டி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.