திருநெல்வேலி மாவட்டத்தில், பள்ளி மாணவர்கள் சிலர் தங்கள் ஜாதியை குறிக்கும் வகையில் சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் ஆரஞ்ச் நிற கயிறுகளை கைகளில் கட்டிய நிலையில் பள்ளிக்கு வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும் மாணவர்களின் நெற்றியிலிடும் திலகங்களிலும், ஜாதிக்கு ஏற்றவாறு வேறுபாடு காணப்படுவதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து மாணவர்கள் கைகளில் கயிறு கட்டி வரக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மத ரீதியாக இது மாணவர்களிடையே பாதிப்பை உண்டாக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த உத்தரவு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும்  பள்ளிகளில் பழைய நிலையே தொடரும் என்றும் அறிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் ஜெயகுமார், 'ஜாதி வேற்றுமைகளை ஒழிக்கவே, மாணவர்கள் கையில் கயிறு கட்டக் கூடாது என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

சென்னை, ராயபுரத்தில் உள்ள, புனித அன்னாள் பள்ளி விளையாட்டு விழாவில், அமைச்சர், ஜெயகுமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்து, ஆலோசனைகள் வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, தமிழகத்திற்கு தேவையில்லை என்பது, அ.தி.மு.க., வின் நிலைப்பாடு. 

கடந்த, 2010ல், மத்தியில் இருந்த, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி அரசு, 'நீட்' தேர்வை கொண்டுவர எடுத்த முயற்சியால் தான், இந்த பிரச்னை நிகழ்ந்தது.பொய் சொல்லி வாழ்ந்தவன் இல்லை; மெய் சொல்லும் நாங்கள் கெட்டு போவதும்இல்லை. 'நீட்' தேர்வு விலக்கு மசோதாவிற்கு, மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததற்கான காரணத்தை அறிந்த பின், இவ்விவகாரத்தில், தமிழக அரசு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் .பள்ளிகளில், ஜாதி வேற்றுமையை ஒழிக்கவே, மாணவர்கள், கையில் கயிறு கட்டக் கூடாது என, அரசு அறிவுறுத்தியுள்ளது, ஜாதி ஒழிய வேண்டும் என்றால் கயிறு ஒழிய வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.