நீட் என்னும் சமூக அநீதிக்கு எதிராக மாணவர் பாசறையின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறுமென நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- நீட் தேர்வு என்னும் கொலைக் கருவியை கொண்டு மாணவர்கள் பிள்ளைகளின் உயிரை குடிக்கும் மத்திய மாநில அரசுகளின் கொடுங்கோன்மையை கண்டித்தும் நீட் தேர்வை முற்றாக ரத்து செய்யக்கோரியும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக மாநிலம் முழுவதும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறவிருக்கிறது. 

அதன் தொடக்கமாக வரும் செப்டம்பர் 16 புதன் கிழமை அன்று காலை 11 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் முன்பு கை பதாகை ஏந்தி மாணவர் பாசறை சார்பாக மாபெரும் அறப் போராட்டம் நடைபெற விருக்கிறது. அன்றைய நாளில் நாடெங்கும் உள்ள மாணவர் பாசறை நிர்வாகிகள் முன்னேற்பாட்டில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பிற பாசறை நிர்வாகிகள் என யாவரும் இணைந்து அவரவர் தங்களது இல்லத்தின் முன்பு கை பதாகை ஏந்தி கல்வி உரிமை முழக்கமிட்டு நீட் தேர்வுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் பெரு நெருப்பை பற்ற வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். 

இந்த அறப் போராட்டத்தில் மாணவர்கள் மாந்தநேயம், பற்றாளர்கள் ஜனநாயகவாதிகள் மண்ணுரிமை போராளிகள், சமூக ஆர்வலர்கள் என யாவரும்  கட்சியை கடந்து அரசியல் வேறுபாடுகளுக்கும் கருத்து முரண்பாட்டுக்கும் அப்பால் நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக சனநாயக போர் செய்திட எங்களோடு கரம் கோர்க்க வேண்டும் என பெயர் அன்போடு அழைக்கிறோம் என நாம் தமிழர் கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.