Struggle against sterlite shootout 240 arrested for by police
கோயம்புத்தூர்
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டைக் கண்டித்து கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 240 பேர் அதிரடியாக கைது செய்யப்பட் டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் காவலாளர்களின் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
இந்தத் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற்றது. மேலும், மதுராந்தகத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்தும் கோவையில் தி.மு.க.வினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சரும், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் சாலை மறியல் நடந்தது.
அப்போது, தி.மு.க.வினர் சாலையில் உட்கார்ந்து பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த பேருந்தை மறித்தனர். இதில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பைந்தமிழ்பாரி, மாவட்ட பொருளாளர் நாச்சி முத்து,
மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கார்த்திக் செல்வராஜ், இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் முருகவேல், வக்கீல்கள் மகுடபதி, மயில்வாகனம், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜேந்திரபிரபு, கார்த்திகேயன், வடகோவை ஜார்ஜ் உள்பட பலர் பங்கேற்றனர். இவர்களை காவலாளர்கள் கைது செய்தனர்.
அதேபோன்று, கோயம்புத்தூர் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் தி.மு.க.வினர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து கிராஸ்கட் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பங்கேற்ற வீரகோபால், பகுதி செயலாளர்கள் வெ.ந.உதயகுமார், மு.ரா.செல்வராஜ், கோவை லோகு, புதூர்மணி, முன்னாள் கவுன்சிலர்கள் டி.பி.சுப்பிரமணியம், நந்தகுமார், குனியமுத்தூர் லோகு, கோட்டை அப்பாஸ், மீனாலோகு, சண்முகசுந்தரம் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இதுபோன்று, கோயம்புத்தூர் மாநகரில் ஐந்து இடங்களில் நடைப்பெற்ற சாலை மறியலில் தி.மு.க.வினர் 240 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
