திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நடத்தும் மறியல் போராட்டம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பேருந்து மற்றும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மறியல் போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் ஏழுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. 

காவிரி மேலாண் வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறியல் காரணமாக பல்வேறு இடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சாலை மறியல் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் காரணமாக கோயம்பேடில் இருந்து பேருந்துகள் புறப்படவில்லை. 

மதுரை ரயில் நிலையத்தில் போலீசாரின் தடுப்பை மீறி, திமுக மற்றும் விசிக-வினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசாரின் தடுப்பை மீறி அவர்கள் ரயில் நிலையத்தினுள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்ததால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

திருவண்ணாமலை, ஆரணியில் சாலை மறியலில் ஈடபட்ட திமுக, விசிகவினர் கைது செய்யப்பட்டனர். ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர் எவ.வேலு உள்பட நூற்றுக்கணக்கானோர் கைது

தஞ்சையில் வருமான வரித்துறை அலுவலகத்துக்குள் நாம் தமிழர் கட்சியினர் புகுந்தனர். சிதம்பரம், கிள்ளை ரயில் நிலையத்தில் 200-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் கைது செய்தனர். 

சேலம் ரயில் நிலையத்தில், திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் அமர்ந்து கொண்டு அவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் திமுகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை - சேலம் பயணிகள் ரயிலை மறித்து அவர்கள் மறியல் நடத்தி வருகின்றனர். மறியலில் ஈடுபட்ட சுமார் ஆயிரத்து 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்று ரயில் பாலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதே போன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மாத்தூரில் கடலூர் - திருச்சி பயணிகள் ரயிலை மறித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி - லால்குடி ரயில் நிலையத்தில் மதுரை - சென்னை ரயிலை மறித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றன. புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட தமிழக பேருந்துவின் கண்ணாடியை போராட்டக்காரர்கள் உடைத்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் காரணமாக ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.