நேர்மையுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே மக்கள் நீதி மய்யம் கட்சியில் இடம் உள்ளது என்றும் நேர்மையில்லாதவர்கள் எங்கள் கட்சிக்குத் தேவையில்லை என்றும் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் கடந்த 21 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து அவரது அண்ணனின் ஆசி பெற்று தனது அரசியல் பயணத்தை கமல்ஹாசன் தொடங்கினார்.

வரும் 8 ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பெண்கள் தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன் தனது இரண்டாவது மாநாட்டை நடத்துகிறார்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் 500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர். அவர்களிடையே கமல்ஹாசன் பேசினார், அப்போது, மக்களின் நலன் ஒன்றைக் கருத்தில்  கொண்டே மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

நேர்மையுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே மக்கள் நீதி மய்யம் கட்சியில் இடம் உள்ளது என்றும் நேர்மையில்லாதவர்கள் எங்கள் கட்சிக்குத் தேவையில்லை என்றும் கமல்ஹாசன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனிடையே மக்கள் நீதி மய்யம் சார்பில் வருகிற 8-ந்தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற மகளிர் தின பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பெண்களிடம், அவர் கலந்துரையாடல் செய்கிறார். அப்போது பெண்கள் கேட்கும், கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளிக்க உள்ளார்.மகளிர் தின கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யத்தினர் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர். இதற்கிடையே மகளிர் தின பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு பெண்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களும், பேச்சாளர்களுமான ஸ்ரீப்ரியா ராஜ்குமார், கமீலா நாசர் ஆகியோர் அழைப்பு விடுத்த வீடியோ காட்சிகளையும் வெளியிட்டனர்.