இன்னும் புயல் வரட்டும்! இன்னும் புயல் வரட்டும்!-ன்னு திண்டுக்கல் சீனிவாசன் சொன்னதோட உள்ளர்த்தம் தெரியுமாடா? புயல் வந்தா சேதம் வரும், சேதம் வந்தா மத்திய நிதி வரும், நிதி வந்தா அதை ஆட்டைய போடலாம்! இதுதானா உங்க அம்மா வழி அரசாங்கம்?’ - கலா மாஸ்டர் ரேஞ்சுக்கு ச்சும்மா அ.தி.மு.க. அரசை இப்படி கிழி கிழியென கிழித்துக் கொண்டிருக்கிறது தி.மு.க.வின் இணையதள விங். 

காரணம் இதுதான்...கஜா புயல் கழட்டிப் போட்ட மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வகையான நிவாரண பொருட்களை வழங்கிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இது நல்ல விஷயம்தானே! இதுக்கு எதுடா திட்றாய்ங்க? என்று நீங்கள் கேட்கலாம். விஷயம் இருக்குது மக்களே இருக்குது. அதாவது அரசு வழங்கும் நிவாரண பொருட்களில் ஒன்று போர்வை. இதை, போர்வைகள் அதிகம் தயாராகும் ஈரோடு மாவட்டத்திலிருந்து வாங்குகிறார்களாம். 

ஆனால் அதில்தான்  இருக்குது பஞ்சாயத்தே. அதாவது, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய கைத்தறி நெசவு கூட்டுறவு சங்கங்களில் இருந்து இந்த போர்வைகளை வாங்காமல், தனியார் விசைத்தறி நிறுவனங்களிடமிருந்து வாங்குகிறார்களாம். அதுவும் தரத்தில் மிகவும் குறைவான இந்த பெட்ஷீட்டுகளை வாங்கி வருவதோடு, 80 ரூபாய் மதிப்புக்கு போர்வைகளை வாங்கிவிட்டு அதற்கு 110 அல்லது 120 ரூபாய்கள் வரை பில் போட்டு பணமெடுக்கிறார்களாம். இந்த பஞ்சாயத்தை, கைத்தறி நெசவாளர் சமேளன தலைவரான ராஜேந்திரனே ஓப்பனாக உடைத்திருக்கிறார்.

 

அரசாங்கம் கிட்டத்தட்ட ஆறு லட்சம் பெட்ஷீட்ஸ் வாங்குது. இதுல ஒரு பெட்ஷீட்டுக்கு நாற்பது ரூபாய்ன்னா, ஆறு லட்சத்துக்கு எவ்வளவு அடிக்கிறாங்கன்னு யோசிக்கணும்.’ என்று விளாசியிருக்கிறார் மனிதர். ஆக கஜா நிவாரண நிதியில் ஊழல் பொங்க துவங்கிவிட்டதாக பஞ்சாயத்துகள் வெடிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் இதை கையிலெடுத்து களமாட திட்டமிட்டுள்ளன. 

ஏற்கனவே, நிவாரண பணிகளில் மெத்தனம், முதல்வர் கடமையை சரியாக செய்யவில்லை எனும் விமர்சனங்களுடன் அமைச்சர்களும், துணை முதல்வரும் போகுமிடமெல்லாம் முற்றுகைக்கு ஆளாகும் நிலையில் இந்த ஊழல் புகார் வேறு வெடிக்கிறது. ஆக அடுத்தடுத்து அடிபடுகிறது எடப்பாடியார் அரசு.