கருணாநிதி 10 ரூபாய் ! ஸ்டாலின் 20 ரூபாய் !! தொண்டர்களுக்கு பொங்கல் பரிசு !!!
மறைந்த முனனாள் திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல திருநாளன்று தன்னை சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு 10 ரூபாய் கொடுத்து ஆசி வழங்குவது போல இந்த ஆண்டு திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை செனடாப் சாலையில் உள்ள தனது வீட்டில் தொண்டர்களை சந்தித்து அவர்களுக்கு 20 ரூபாய் வழங்கி வாழ்த்தினார்.
தைப் பொங்கல் அன்று ஒவ்வொரு ஆண்டும் கோபாலபுரம் கொண்டாட்டத்தில் மூழ்கி இருக்கும். அன்று கருணாநிதி அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து அறிவாலயம் வந்துவிடுவார். அங்கு தன்னை காண்பதற்கும், வாழ்த்துவதற்கும் வரும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு ஆசி வழங்கி அனைவருக்கும் 10 ரூபாய் நோட்டு ஒன்றை வழங்கி வாழ்த்துவார்.
10 ரூபாயை கருணாநிதியிடம் இருந்து பெற்றுக் கொண்ட தொண்டர்கள் ஏதோ நோபல் பரிசு பெற்றுக் கொண்டதைப் போல மகிழ்ச்சி அடைவார்கள்.
இந்த ஆண்டு கருணாநிதி மறைந்துவிட்டதையடுத்து திமுக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், தனது தந்தையின் அதே பாணியைக் கடைப்பிடித்தார்.
சென்னை செனடாப் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து வாழ்த்தினார். கருணாநிதி 10 ரூபாய் கொடுத்தது போல, ஸ்டாலின் தொண்டர்களுக்கு 20 ரூபாய் வழங்கி வாழ்த்தினார்.
இதே போல் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஸ்டாலினுக்கு பட்டு வேட்டி, சட்டை வழங்கி காலில் விழுந்து ஆசி பெற்றார். கருணாநிதியைப் போல ஸ்டாலினும் ரூபாய் நோட்டு வழங்கி ஆசி வழங்கியதை தொண்டர்கள் சிலாகித்து பேசிவருகின்றனர்.