ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி சிப்காட்டில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வேண்டும் குமரெட்டியாபுரம் மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகள் தொடங்கிய நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், விரிவாக்க பணிகளை மேற்கொள்ள கூடாது என வலியுறுத்தி கடந்த இரண்டு மாதங்களாக குமரெட்டியாபுரம் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுவாயுவால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ள குமரெட்டியாபுரம் மக்கள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். 

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க அந்த ஆலை விண்ணப்பித்திருந்தது. ஆனால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை பின்பற்றவில்லை என கூறி உரிமம் புதுப்பிக்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதனால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது.

எனினும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி மாணவர்கள் உட்பட இந்திய மாணவர் சங்கத்தினர் 200 பேர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை போலீசார் தடுப்பு வேலி அமைத்து தடுத்தனர்.

ஆனால், தடுப்பு வேலிகளை தூக்கி எறிந்து மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என முழக்கமிட்ட மாணவர்கள், எங்களின் குரல் கேட்கிறதா ஆட்சியரே? எனவும் முழக்கம்மிட்டு கேட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.