தூத்துக்குடி மக்களை வாட்டி வதைக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட உலக நாடுகளிலும்  தமிழர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை உள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும்,  கேஸ் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அ.குமரெட்டியாபுரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.குமரெட்டியாபுரத்தில் பொதுமக்களின் போராட்டம் இன்று 58 வது நாளாக நீடிக்கிறது.

இதே போல ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி, வடக்கு சங்கரப்பேரி, தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், மீளவிட்டான், சில்வர்புரம் ஆகிய கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் தங்கள் கிராமங்களில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் தூத்துக்குடிக்கு நேரடியாக சென்று தனது ஆதரவைத் தெரிவித்தார். இது தவிர திரையுலகினரும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் மட்டும்ல்லாமல் வெளிநாடுகளில் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்துள்ளன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரான வேதாந்தம் குரூப்ஸ் லண்டன்  அலுவலகம் மற்றும் வீட்டின் முன்பு தமிழர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஒன்று திரண்ட தமிழகர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானஒ பதாகைகளை தமிழர்கள் ஏந்தி முழுக்கங்கள் எழுப்பினர். மேலும் தமிழகத்தின் வாழ்வாதாரத்தைக் காக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் தமிழர்கள்  முழக்கமிட்டனர்.