ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் இன்று நடைபெறுவதாக இருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த ஆலையின் அருகில் உள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 52 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் தூத்துக்குடியில் நடைபெற்ற மிக பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஆலை நிர்வாகத்தை அதிர்ச்சி அடையச் செய்தது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் நேரடியாக சென்று அந்த கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்தும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பதிவிட்டிருந்தார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சியினரும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு அனுமதி அளித்தது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடுமையான எதிர்ப்பு, போராட்டம், நோட்டீஸ் என பல சிக்கல்களை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளிப்பதற்காக ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்  சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.