தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மிக மோசமாக உள்ளதாகவும், மத்திய தரக்கட்டுப்பாடு ஆணையம் அங்கீகரித்ததைவிட   அதிக அளவிலான தனிமங்கள் படிந்துள்ளதாகவும் மத்திய அரசு அளித்துள்ள அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் உள்ள காற்று மற்றும் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடி வந்தனர். அண்மையில் அப்பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்கள் போராடினர்.

100 ஆவது நாளில் இந்த போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள சிப்காட் வளாகத்தில் நிலத்தடி நீரின் நிலை என்ன?, மாசுபட்டுள்ளதா? என்று மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா எம்.பி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேஹ்வால் எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வில், அங்கு நிலத்தடி நீரில் மத்திய தரக்கட்டுப்பாடு ஆணையம் அங்கீகரித்ததை விட அதிகளவிலான தனிமங்கள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேட்மியம், குரோமியம், மாங்கனீசும் இரும்பு மற்றும் அர்செனிக் ஆகிய தனிமங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட நீரில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது..

 

மேலும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடத்திய ஆய்வில், நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பலமடங்கு தனிமங்கள் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. எனினும், நிலத்தடி நீரில் உள்ள மாசுக்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி பொது மக்கள் தொடர்ந்து இதற்காகத்தான் போராடி வந்த நிலையில் தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தகவல் தூத்துக்குடி பகுதி மக்களிடையே கடும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.