அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை முதல்வரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2021ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் முடிவு செய்தபடி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டும். அந்த குழுதான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும் என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக கூறினார். 

இதையடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டனர். முதல்வர் எடப்பாடியையும் அவ்வப்போது சந்தித்து மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டு குழு அமைப்பதில் உறுதியாக இருந்தார்.

இந்நிலையில்தான், மத்திய பாஜ மேலிடம் இந்த விஷயத்தில் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து முதல்வர் எடப்பாடியும் இறங்கி வந்து வழிகாட்டு குழு அமைக்க சம்மதம் தெரிவித்தார். இந்த வழிகாட்டு குழுவில் 5 பேர் எனது (ஓபிஎஸ்) ஆதரவாளர்களும், 6 பேர் எடப்பாடி ஆதரவாளர்களும் இடம்பெற்றுள்ளனர். முதலில் ஆட்சி எடப்பாடி பழனிசாமிக்கும், கட்சி துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்று கூறப்பட்டு வந்த நிலையில்  வழிகாட்டு குழுவிலும் எடப்பாடியார் கையே ஓங்கியுள்ளது.

வழிகாட்டுதல் குழுவின் விவரம்;-

1.வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

2.மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

3. உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி

4. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

5. உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

6. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

7. மனோஜ் பாண்டியன்

8. ஜேசிடி பிரபாகர்

9. முன்னாள் அமைச்சர்  பா.மோகன்

10. கோபாலகிருஷ்ணன்

11. மாணிக்கம்