கும்பகோணத்தில் உள்ள எம்ஜிஆர் சிலையின் அருகே ஜெயலலிதாவுக்கு அமமுக சார்பில் நள்ளிரவில் அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் வடக்கு, கிழக்கு வீதி சந்திப்பில், ஏற்கனவே, எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்.ஜி.ஆர். சிலை அருகிலேயே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மார்பளவு சிமென்ட் சிலையை  நள்ளிரவில் அமமுகவினர் அமைத்தனர். 

ஏற்கெனவே, பொது இடங்களில் சிலை வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ள நிலையில், இங்கு ஜெயலலிதாவுக்கு நள்ளிரவில் சிலை வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து, அ.ம.மு.க., நகர செயலர், குருமூர்த்தி கூறியதாவது ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கப்பட்டது தொடர்பாக, போலீசார் விசாரித்தனர். 'உடனடியாக சிலையை அகற்ற வேண்டும்' என்றனர். அதற்கு, தமிழ்நாடு முழுவதும், இதுபோல் ஜெயலலிதாவின் சிலைகள், அனுமதி பெறாமல் தான் வைக்கப்பட்டுள்ளன. அந்த சிலைகளை அகற்றுங்கள், நாங்களும் எடுக்கிறோம் எனக் கூறிவிட்டேன் என்றார்.