statue for tamil mother issue
அமெரிக்காவில் சுதந்திர தேவிக்கு சிலை அமைத்திருப்பதை போல மதுரையில் தமிழன்னைக்கு 100 கோடி ரூபாய் செலவில் சிலை அமைக்கப்படும் என 2013ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

ஆனால், அந்த அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தமிழன்னைக்கு சிலை அமைக்கும் பணியை இதுவரை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.
10வது உலகத் தமிழ் மாநாடு வரும் 2019ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதற்குள்ளாக தமிழன்னை சிலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை தமிழன்னை சிலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை.

இதுதொடர்பாக தமிழ் ஆர்வலர்கள் தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழன்னை சிலை தொடர்பாக விளக்கமளித்துள்ள தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், தமிழன்னை சிலை அமைக்கும் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் 100 கோடி செலவில் சிலை அமைக்கும் முடிவு மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே கைவிடப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 50 கோடி ரூபாய் செலவில் மதுரை தமிழ்ச்சங்க கட்டிடத்தில், கண்காட்சியுடன் கூடிய சிலை அமைக்கப்படும் என அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழன்னைக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை மக்கள் மன்றத்தில் பொதுவெளியில் வெளியிடும் அரசு, அந்த முடிவில் செய்த மாற்றத்தையும் மக்கள் மன்றத்தில் தெரிவித்திருக்க வேண்டுமல்லவா? அதைவிடுத்து அதுதொடர்பான கேள்விகள் எழுந்தபிறகு, அதில் மாற்றம் செய்ததாக கூறுகிறது. அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு மக்களை ஏமாற்ற நினைப்பதன் வெளிப்பாடுதான் இதுபோன்ற நடவடிக்கைகள் என அரசியல் விமர்சகர்களும் தமிழ் ஆர்வலர்களும் கொந்தளிக்கின்றனர்.
