உத்தர பிரதேச மாநிலம்  லக்னோவில்  காங்கிரஸ் கட்சியினர்   தொடங்கியுள்ள ஸ்டேட் பாங்க் ஆப் டொமேட்டோ என்ற தக்காளி வங்கியில் அரைகிலோ  தக்காளியை முதலீடு செய்து, ஆறு   மாதம் ‌ கழித்து  வட்டியுடன் ஒரு கிலோ தக்காளியை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்புவரை தக்காளியின் விலை வரலாறு காணாத அளவுக்கு கிலோ 120 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது 60 ரூபாய் வரை குறைந்துள்ளது.

ஆனால்  வடமாநிலங்களில் தக்காளியின் விலை கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனையாவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்த  உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் காங்கிரஸ் கட்சியினர்  தக்காளி வங்கியை தொடங்கி  நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டேட் பாங்க் ஆப் டொமேட்டோ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த வங்கியில் மக்கள் தங்களிடம் உள்ள    தக்காளியை  முதலீடு செய்து வைக்கலாம் என்றும் அவர்களுக்கு தேவைப்படும்போது கூடுதல்  தக்காளி  வட்டியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த விநோத வங்கியை நோக்கி ஏராளமான பொது மக்கள் பலரும் இந்த வங்கியில்  தக்காளியை  டெபாசிட் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் இந்த வங்கியில் குறைந்த விலையில் தக்காளி வழங்கப்படும் என்றும், தக்காளி வாங்க கடன் வழங்கப்படும் என்றும்      ஸ்டேட் பாங்க் ஆப் டொமேட்டோ அறிவித்துள்ளது.

இன்னும் அதிசயமாக தக்காளியை வைத்துக்கொள்ள  லாக்கர் வசதியும் உள்ள இந்த வங்கி   காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்றும்  உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.