புது அரசியல்வாதி கமலின் புதிய கட்சியில், இதுவரையில் அரசியலுக்கு சம்பந்தமேயில்லாத நபர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே ‘உயர்மட்ட குழு உறுப்பினர்’ எனும் உயர்ந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபிரியா, சிநேகன், கமீலா நாசர் என்று ஆச்சரியப்படுத்தினாலும், ஒரு பக்கம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது இவர்களைப் பார்த்தால்.

இதுவரையில் அரசியல் வெளியில் எந்த தடத்தையும் பதிக்காத இவர்கள், திடீரென மிகப்பெரிய ஒரு ஆளுமையின் அரசியல் இயக்கத்தில் உச்ச நிலையில் இருக்கிறார்களே! இவர்களால் என்ன செய்துவிட முடியும், எப்படி கமலின் சிந்தனையை செயலாக்குவார்கள்? என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன.

இந்நிலையில் அரசியல்வாதிகளின் அடிப்படை தகுதியான பேச்சு திறமை, எதிராளியை விமர்சனம் செய்தல் போன்றவையாவது இவர்களிடம் இருக்கிறாதா?...என்று அலசுவது மிக முக்கியமானது. அப்படி இவர்களை எடைபோட்டு பார்த்ததில் பேச்சுத் திறமையில் அதிர்வுகள் கிளப்பத்தான் செய்கிறார்கள்.

ஜெயலலிதா இருந்த போது கமலஹாசன் ஏன் அரசியலுக்கு வரவில்லை? என்று கேட்டதுக்கு “ஜெ., இருக்கும்போது கமல் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? அவர் இல்லாத இந்த நேரம்தான் அரசியலில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதை நிரப்ப இதுதான் சரியான நேரம். அதற்குத்தான் கமல் வந்திருக்கிறார்.

கமலுக்கென்று பெரிய வரவேற்பிருக்கிறது. 30 மணி நேரத்தில் ரெண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் அவரது கட்சியில் இணைந்திருக்கின்றனர்.” என்கிறார் கமீலா நாசர்.

கவிஞர் சிநேகனோ, “தற்போதைய அரசு மக்களுக்கான பணிகளின் மீது அக்கறை இன்றி குழப்பமான சூழ்நிலையில் இருக்கிறது. இதற்கான மாற்று அரசியல் தேவை. இதற்காகத்தான் கமல்ஹாசன் களமிறங்கியுள்ளார். மக்களுக்கான மாற்று அரசியலை அவர் தருவார் எனும் நம்பிக்கையுடன் அவருடன் கைகுலுக்கி களம் இறங்கியுள்ளேன்.

அனைவருக்கும் தரமான, சமமான கல்வி எனும் உயர்ந்த சிந்தனையும், கிராமங்களையும் விவசாயத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்கிற தொலைநோக்கு பார்வையும் அவரிடம் இருக்கிறது.

அரசியலில் கமலுக்கும், ரஜினிக்கும் ஆரோக்கியமற்ற போட்டி நிச்சயம் இருக்காது. உறுதியாக ஆரோக்கியமான போட்டியே நடக்கும். இதன் மூலம் முழு பயனையும் அடையப்போவது மக்களே.” என்றிருக்கிறார்.

கமலின் கட்சியில் இணைய துடிக்கும் நடிகர் வையாபுரியோ “நான் அ.தி.மு.க.வுல நட்சத்திர பேச்சாளரா இருக்கேன். ஆனா அம்மா இருந்தப்ப இருந்த ஒருங்கிணைப்பு இப்போ அங்கே இல்லை. ஸ்டார் பேச்சாளர்களுக்கு மரியாதையே இல்லை.அதனால கமல்ஹாசன் கூப்பிட்டா போதும், ஓடோடி வந்துடுவேன்.” என்றிருக்கிறார்.
இவர்களால் கமல் கட்சி கரை சேருமா? என்பது போகப்போக  தெரியும்.