வெங்காயம் விலையை வைத்து மக்கள் மத்தியில் மு.க ஸ்டாலின் பீதியை கிளப்பி வருகிறார் எனவும், இந்த விஷயத்தில் பீதியை கிளப்ப வேண்டாம் எனவும் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொழில் துறை அமைச்சர் பாண்டியராஜன் முன்னிலையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் உறுப்பினராக இணைந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியதாவது:  

தமிழகத்தில் வெங்காயத்தின் வரத்து குறைந்த காரணத்தினால் விலை கூடுதலாக உள்ளது. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பசுமை அங்காடிகள் மூலம் ஒரு கிலோ 45 க்கு விற்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் வெங்காய விலை குறித்து மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறார். இந்த விஷயத்தில் பீதியை கிளப்ப வேண்டாம் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மருத்துவ கல்லூரி மாணவர்கள் இட ஒதுக்கீட்டை பொருத்தவரையில் அரசின் சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். அதற்கு விரைவில் நல்ல முடிவு தெரியவரும். 

அதேபோல் கழகத்துடன் இணைந்து போராடுவோம் என்று கூறிய மு.க ஸ்டாலினுக்கு நாங்கள் சொல்வது என்னவென்றால், வரும் காலங்களில் போராட்டம் என்பதே இருக்காது என்றார், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் இந்த 7.5 சதவீத  இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டுவந்தபோது முதன்முதலாக எதிர்த்தது திமுக தான். அப்போது எதிர்த்துவிட்டு இப்போது ஆதரவாகப் பேசுகின்றனர். மொத்தத்தில் இவ் விஷயத்தில் திமுக இரட்டைவேடம் போடுகிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீடு வரும் வரையில் கவுன்சிலிங் நடைபெறாது என அமைச்சர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.