அவர்கள் நோக்கம் லாவண்யாவுக்கு நீதி கேட்பது அல்ல, எப்படியாவது திமுக அரசுக்கு எதிராக அவப்பெயர் ஏற்படுத்தவேண்டும், திமுக ஒரு இந்து விரோத கட்சி என்ற எண்ணத்தைக் உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காகத்தான் நிதி திருப்பாதி டெல்லியில் இருந்து வந்திருக்கிறார், எனவே இந்த போராட்டம் டெல்லியில் பாஜகவினரால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.
லாவண்யா வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கும்போது முதல்வர் ஸ்டாலினின் வீட்டை ஏபிவிபி மாணவர் அமைப்பினர் முற்றுகை இட வேண்டிய அவசியம் என்ன என்றும், முதல்வருக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது, லாவண்யாவுக்கு நியாயம் கோரி இது நடக்க வில்லை, இதற்கான முழு திட்டமிடலும் டெல்லியில் நடத்தப்பட்டு அண்ணாமலையின் வழிகாட்டுதலின் பேரில் நடந்தது என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல், அதிமுகவை காட்டிலும் பாஜக தமிழக அரசையும் முதல்வரின் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. சட்டமன்றத்தில் அதிமுகதான் எதிர்க்கட்சி என்றாலும் மக்கள் மன்றத்தில் எதிர்க் கட்சி பாஜகதான் என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அண்ணாமலை அம்முனைப்பில் தமிழக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில்தான் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மாணவி லாவண்யா தற்கொலை மதமாற்றம் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டதால் நடந்தது என பாஜகவினர் குற்றம்சாட்டி அந்த பெண்ணுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் மாணவி லாவண்யாவுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி கடந்த 15ஆம் தேதி ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் 35 பேர், அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் முத்துராமலிங்கம், ஹரி கிருஷ்ணன் மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஏபிவிபி தேசிய பொறுப்பாளர் நிதி திரிபாதி உள்ளிட்டோர் சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் எச்சரிக்கையை மீறி மாணவர் அமைப்பினர் முதல்வரின் வீட்டை முற்றுகையிட ஓடினார், போலீசார் விரட்டிச் சென்று அவர்கள் அனைவரையும் தடுத்து கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அடைத்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 35 பேரும் கலகம் செய்ய முயற்சித்ததாகவும், மத உணர்வைத் தூண்டி பிரிவினையை தூண்ட முயற்சித்ததாகவும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரையும் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நடுவர் சுப்ரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். முன்னதாக அந்த மாணவர்களிடம் போலீசார் விவரங்களை சேகரித்தபோது அவர்கள் தங்கள் பெயர் மற்றும் விலாசத்தை மாற்றி கூறியதன் பின்னர் தெரியவந்தது. எனவே போலி முகவரி கொடுத்ததாக மேலும் அவர்கள் மீது மற்றொரு பிரிவில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏபிவிபி மாணவர்களின் இந்த அத்துமீறல் நடவடிக்கை பலரும் பல வகையில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளர் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், லாவண்யா விவகாரம் சிபிஐக்கு மாற்றப்பட்ட பின்னர் ஏபிவிபி அமைப்பினர் முதல்வரின் வீட்டை முற்றுகையிட காரணம் என்ன? என கேள்வி எழுப்பி உள்ளார். ஏபிவிபி மாணவர் அமைப்பைச் சேர்ந்த தேசிய பொறுப்பாளர் நிதி திரிபாதி விமானம் மூலம் சென்னை வந்து ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடும் அளவுக்கு அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர்கள் நோக்கம் லாவண்யாவுக்கு நீதி கேட்பது அல்ல, எப்படியாவது திமுக அரசுக்கு எதிராக அவப்பெயர் ஏற்படுத்தவேண்டும், திமுக ஒரு இந்து விரோத கட்சி என்ற எண்ணத்தைக் உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காகத்தான் நிதி திருப்பாதி டெல்லியில் இருந்து வந்திருக்கிறார், எனவே இந்த போராட்டம் டெல்லியில் பாஜகவினரால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இதில் பங்குள்ளது. அண்ணாமலை ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தவர் அப்படி இருந்தும் அனுமதிக்கப்படாத இரு இடத்தில் குறிப்பாக முதல்வரின் வீட்டின் முன்னிலையில் மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அதில் பல உள்நோக்கம் இருக்கிறது. ஸ்டாலின் வீட்டு முன்னிலையில் வன்முறை செய்வதற்காகவே அவர்கள் வந்திருக்கிறார்கள் என்றும் சந்தேகம் ஏற்படுகிறது. லாவண்யாவுக்கு உடனே நீதி கிடைக்க வேண்டும் என்றால் அதை விசாரிக்கும் சிபிஐ அலுவலகத்தின் முன்னிலையில்தான் அவர்கள் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். அதற்கு நிதி திருப்பதி டெல்லியிலிருந்து வரவேண்டிய அவசியமே இல்லை.
டெல்லியில்தான் சிபிஐ தலைமையகம் இருக்கிறது. அந்த சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது, முதல்வர் வீட்டிட் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவர்கள், பிரதமர் வீட்டு முன்னிலையில்தான் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்க வேண்டும், பிரதமர் வீட்டின் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது, அது அதி பாதுகாப்பு நிறைந்த பகுதி என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது, ஆனால் வேண்டுமென்றே ஸ்டாலின் வீட்டில் முன்னிலையில் போராட்டம் நடத்த வந்துள்ளனர். அப்படி என்றால் ,பிரதமரின் உயிர் முக்கியம், முதலமைச்சரின் உயிரும் முக்கியம் இல்லையா.? முதல்வர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவதற்கு ஒரு டீம், பின்னர் அதை வீடியோ எடுப்பதற்கு 10 பேர் கொண்ட தனி டீம், இதுதான் பாஜகவின் ஏற்பாடு. மொத்தத்தில் இது முழுக்கமுழுக்க திட்டமிடப்பட்ட ஒரு போராட்டம், அதனால்தான் தற்போது அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து சிறையில் வைத்திருக்கிறார்கள். தமிழக போலீஸ் எடுத்த நடவடிக்கை சரியான நடவடிக்கை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இவ்வாறு சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
