திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதலமைச்சர் கனவில் மிதக்கிறார். ஆனால் அவரது கனவு பலிக்காது என்று அதிமுக இலக்கிய அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி கூறியுள்ளார்.

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக வியூகங்களை வகுப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்கான காய்நகர்த்தல்களை நடந்திவருகின்றன. மறுபக்கம் தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. மொத்தத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகள் அதிரடியாக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். 

இந்நிலையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் செங்கல்பட்டு எஸ்.பி கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதில் முன்னாள் அமைச்சரும் அதிமுக இலக்கிய அணி செயலாளரும், மாவட்ட மண்டல பொறுப்பாளருமான வளர்மதி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: போலி வாக்காளர்களை கண்டறிந்து அவர்களை  வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணியில் பாக முகவர்கள் ஈடுபடவேண்டும். மேலும் விடுபட்ட பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பதில்கவனம் செலுத்த வேண்டும். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியதுபோல அதிமுக இன்னும் 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றது, ஆனால் இந்த முறை திமுகவை  நம்ப மக்கள் தயாராக இல்லை. மு.க ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்ற கனவில் மிதக்கிறார். நிச்சயம் அது நடைபெறவே நடைபெறாது. போலியான வாக்குறுதிகளை அளித்து வாக்குகள் வாங்கிய திமுகவுக்கு தக்க பதிலடி கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர். எதிர்வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று 3வது முறையாக ஹாட்ரிக் சாதனை படைக்கும். செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், அதிமுகவின் கோட்டையாக்க உறுதி ஏற்போம், இவ்வாறு அவர் பேசினார்.