தமிழகத்தில் போலி இருப்பிடச் சான்றிதழ் மூலம் நடைபெற்றுள்ள ஊழல், மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற வியாபம் ஊழலை விட மோசமானதாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த அதிர்ச்சி தீர்ப்பையடுத்து, மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கவுன்சிலிங்கின்போது, கேரளாவைச் சேர்ந்த 9 மாணவர்கள், போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து  கவுன்சிலிங்கில் பங்கேற்றது  கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 4 மாணவர்களின் அட்மிஷன் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து திமுக செயல் தலைவர், மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மருத்துவ கலந்தாய்வில் கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் 9 பேர் போலி இருப்பிடச் சான்று கொடுத்து சேர முயற்சித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

போலி  இருப்பிடச் சான்றிதழ் மூலம் நடைபெற்றுள்ள ஊழல், மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற வியாபம் ஊழலை விட மோசமானதாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த முறைகேடுகளால் இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக் கொள்கைகள் எல்லாம் எடப்பாடி தலைமையிலான குதிரை பேர அரசால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

போலி இருப்பிடச் சான்றிதழ் மற்றும் முறைகேடான தேர்வு மூலம் வேறு மாநிலத்தவரை மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு அதிமுக அரசு துணை போயிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

இரட்டை இருப்பிடச் சான்றிதழ் வழங்க காரணமாக இருந்தோர், தேர்வுக் கமிட்டிக்கு நிர்பந்தம் கொடுத்தோர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதால் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.