அரசு ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வாங்க …எடப்பாடிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை…

அதிமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும்  அரசு நிர்வாகம் முற்றிலும் நிலைகுலைந்து, போக  நேரிடும் என்பதால் உடனடியாக அரசு ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழக அரசில் உள்ள 64 துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் தங்களது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெரும் போராட்டத்தை தொடங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங் களை தாமதமின்றி நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு அளிக்கும் வரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 முக்கியக் கோரிக்கைகள் முன் வைத்து அரசு ஊழியர்கள் தீவிரமாகப் போராடி வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடுமையான வறட்சியும், எங்கும் குடிநீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகின்ற இந்தநேரத்தில் அரசு ஊழியர்களின் பணி மிக முக்கியமானது மட்டுமின்றி, மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு மிகவும் அவசரமானது என தெரிவித்துள்ள ஸ்டாலின் , அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தும் அரசு ஊழியர்களை அழைத்துப் பேசாமல் அலட்சியம் காட்டியது அதிமுக  அரசின் மோசமான அணுகு முறை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ஏற்கனவே அதிமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் அரசு நிர்வாகம் முற்றிலும் நிலைகுலைந்து, பாதிப்புக்கு ஆளாகாமல் தடுக்க அரசு ஊழியர்கள் போராட்டத்தில் உடனடி கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.